செய்திகள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

Published On 2017-04-21 17:37 GMT   |   Update On 2017-04-21 17:38 GMT
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் விழுந்து மாடு இறந்தது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெயில் பதிவானது. கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. பகலில் அடிக்கும் வெயிலின் உஷ்ணம் இரவு நேரத்திலும் தொடர்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு
உள்ளாகினர்.இந்தநிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 103.1 டிகிரி வெயில் அடித்தது. நேற்று மாலை தர்மபுரியில் சூறைக்காற்றுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தர்மபுரி நகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பென்னாகரத்தில் சூறைக்காற்றுக்கு அரசு தலைமை மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரியில் மழை காரணமாக சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டணம், மற்றும் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் காவேரிப்பட்டணம் மில்மேடு பகுதியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அந்த நேரம் செல்வம் என்பவர் தென்னந்தோப்பில் பசு மாட்டை கட்டி வைத்திருந்தார். அப்போது தென்னை மரம் சாய்ந்து மாட்டின் மீது விழுந்தது. இதில் மாடு பரிதாபமாக இறந்தது.

Similar News