செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி அணியை சரமாரியாக தாக்கிய கே.பி.முனுசாமி: அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்

Published On 2017-04-20 10:49 GMT   |   Update On 2017-04-20 10:49 GMT
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இதனால் அதிமுகவில் குழப்பமே நீடிக்கிறது.
சென்னை:

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 

ஆலோசனை கூட்டத்திறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ். அணியின் கே.பி.முனுசாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். 

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் தான்தோன்றி தனமாக பேசுகிறார்கள். முதலமைச்சராக எடப்பாடி நீடிப்பார் என்ற கேள்வி தேவையில்லை. நாங்கள் அந்த கோரிக்கையை முன் வைக்கவில்லை. 

மூன்றாம் தர அரசியல்வாதியை போல் பேசுகிறார் ஜெயக்குமார். சசிகாலா விலக்கிவைப்பு என்று சொல்ல அமைச்சர் ஜெயக்குமார் தயங்குகிறார். தினகரன் குடும்பம் என்றே ஜெயக்குமார் குறிப்பிடுகிறார்.



மக்கள் செல்வாக்கு இல்லாத அணியாக சசிகலா அணி தற்போது உள்ளது. வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தினகரன், அவர்களை வைத்து தப்பிக்க முயற்சிக்கிறார். 

தினகரனை வெளியேற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை பயன்படுத்தி சசிகலா, நடராஜன் மற்றும் திவாகரன் மூவரும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர். அதிமுக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படவில்லை. சசிகலாவின் முதலமைச்சராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

கருணாநிதி உடல்நலக் குறைவாக உள்ள நேரத்தில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. வெற்றிடத்தை நிரப்பும் தலைவராக பன்னீர் செல்வம் உருவாகி வருகிறார். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்டாயத்தின் பெயரால், மிரட்டலின் பெயரால் அங்கேயே இருக்கிறார்கள்.

மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவர் பன்னீர்செல்வம் மட்டும் தான். எப்போது தேர்தல் நடந்தாலும் பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டார்கள். எடப்பாடி அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் முதலமைச்சராக பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என விரும்புகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த இரு தினங்களாக அதிமுகவின் இரு அணிகளும் சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தெரிந்த நிலையில், கே.பி.முனுசாமியின் பேட்டி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த குழப்பம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.

Similar News