செய்திகள்

பாபநாசத்தில் விவசாயிடம் ரூ.2 லட்சம் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

Published On 2017-04-19 12:12 GMT   |   Update On 2017-04-19 12:12 GMT
பாபநாசத்தில் விவசாயிடம் ரூ.2 லட்சம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுதாகரன் (வயது 47). விவசாயி. இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் விவசாயக்கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அடைப்பதற்காக நகைகளை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளார்.

நேற்று காலை சுதாகரன் ஒரு பையில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் கட்ட சென்றார். அப்போது மேலாளர் இல்லாததால் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துவிட்டு மீண்டும் வடக்குமடம் வளாகம் வழியாக சீனிவாசபெருமாள் கோவில் வளைவில் திரும்பும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அவரிடம் உங்களின் பணம் கீழே கொட்டிகிடக்கிறது என்று கூறியுள்ளார்.

உடனே சுதாகரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே விழுந்த பணத்தை எடுக்கும்போது அந்த வாலிபர் அவர் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். அந்த பையில் வங்கி பாஸ்புத்தகம், வயல்பத்திரம் நகல், வி.ஏ.ஓ. சான்றிதழ் வைத்திருந்தார். இதுகுறித்து சுதாகரன் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News