செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி 17-ந்தேதி ஆஜராக வருமான வரித்துறை மீண்டும் சம்மன்

Published On 2017-04-15 03:07 GMT   |   Update On 2017-04-15 03:07 GMT
அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் 17-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அவருடைய உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்கள், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் வீடு, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு ஆகிய இடங்களில் கடந்த 7-ந்தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

கடந்த 9-ந்தேதி, விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வருமான வரி புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், 10-ந்தேதி விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆனால், டாக்டர் கீதாலட்சுமி வருமானவரி புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராவதற்கு தனக்கு கால அவகாசம் வேண்டும் என அவர் கேட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு 12-ந்தேதி நேரில் ஆஜராவதற்கு வருமான வரித்துறை சார்பில் அனுமதியளிக்கப்பட்டது.



இதற்கிடையே சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான சென்னை தியாகராயநகரில் உள்ள ‘ராடன்’ அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 11-ந்தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க கடந்த 12-ந்தேதி ராதிகா வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். 2-வது நாளாக விளக்கம் அளிக்க சரத்குமாரும் அவருடன் வந்திருந்தார். இதேபோல அன்றைய தினம் டாக்டர் கீதாலட்சுமியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் 3-வது நாளாக சரத்குமாரும், 2-வது நாளாக சிட்லபாக்கம் ராஜேந்திரனும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் வருகிற திங்கட்கிழமை (17-ந்தேதி) மீண்டும் ஆஜராகவேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து இதுவரை நடந்த விசாரணை திருப்தியளிக்காததால் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காகவே மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திங்கட்கிழமையன்று நடைபெறும் விசாரணையின்போது, விஜயபாஸ்கர், கீதாலட்சுமி ஆகியோர் ஏற்கனவே அளித்த விளக்கம் உண்மையானதா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் துருவித்துருவி விசாரணை நடத்த உள்ளனர். மேலும் சுகாதாரத்துறையில் பணியாளர்கள் நியமனம் முதல் மருந்துகள் வாங்கியது வரை பல்வேறு முறைகேடுகள் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆகையால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட உள்ளது. விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமியிடம் தனித்தனியாக நடத்தப்பட உள்ள இந்த விசாரணை வருமானவரி சோதனையில் சிக்கிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் திருப்பு முனையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News