செய்திகள்

புதுவையில் கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரி மாற்றம்

Published On 2017-03-31 08:11 GMT   |   Update On 2017-03-31 08:11 GMT
புதுவையில் கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரியை மாற்றம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். கவர்னர்- எம்.எல்.ஏ.க்கள் மோதல் சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி அவ்வப்போது ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அங்கு நடக்கும் அரசு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

ஆனால், இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ.க் களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. இதனால் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் முதலியார் பேட்டை தொகுதிக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அந்த தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பாஸ்கருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் தொகுதியில் தூய்மை பிரச்சினை தொடர்பாக பொது மக்களை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிக்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி கமி‌ஷனர் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்தினார் இதுபற்றியும் எம்.எல்.ஏ.வுக்கு தெரிவிக்கவில்லை.

எனவே, பாஸ்கர் எம்.எல்.ஏ. நேரடியாக கூட்டம் நடத்த இடத்துக்கு சென்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

தனக்கு தெரியாமல் கூட்டம் நடத்தியது தொடர்பாக நகராட்சி கமி‌ஷனர் மீது சட்டசபை உரிமை மீறல் குழுவிடம் பாஸ்கர் எம்.எல்.ஏ. புகார் கொடுத்தார்.

3 நாள் கழித்து பாஸ்கர் எம்.எல்.ஏ. மீது நகராட்சி கமி‌ஷனர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தன்னை பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், திட்டியதாகவும் கூறி இருந்தார். ஆனால், அதன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

புதுவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நேற்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. அப்போது இந்த பிரச்சினையை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கிளப்பினார்கள்.

கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து எம்.எல். ஏ.க்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதிகாரிகளை எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தூண்டி விடுகிறார். அவரது தூண்டுதலால் தான் எம்.எல்.ஏ. மீது நகராட்சி கமி‌ஷனர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மதிக்காமலும், மக்கள் ஆட்சிக்கு உரிய மரியாதை கொடுக்காமலும் செயல் படும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.

அது மட்டும் அல்ல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், பாலன், அனந்தராமன் ஆகியோரும் கவர்னரை தாக்கி கடுமையாக பேசினார்கள். கவர்னருக்கு ஆதரவாக இருந்து கொண்டு எம்.எல். ஏ.க்களுக்கு எதிராக செயல்படும் நகராட்சி கமி‌ஷனரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம், உரிமை குழுவிடம் எம்.எல்.ஏ. புகார் கொடுத்து இருப்பதால் துணை சபாநாயகர் தலைமையிலான உரிமை குழு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும். அதுவரை நகராட்சி கமி‌ஷனரை காத்திருப்போர் பட்டியலில் வைக்குமாறு உத்தரவிடுகிறேன் என்று கூறினார்.

சபாநாயகர் உத்தரவு என்பது நீதிமன்றத்தில் நீதிபதி தீர்ப்புக்கு ஒப்பானதாகும். அதை மீற முடியாது. எனவே, தலைமை செயலாளர் நேற்று இரவே சபாநாயகர் உத்தரவை ஏற்று நகராட்சி கமி‌ஷனரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் புதிய கமி‌ஷனராக கலை பண்பாட்டு துறை இயக்குனர் கணேசன் நியமனம் செய்யப்பட்டார்.

கவர்னர்- எம்.எல்.ஏ.க் கள் மோதல் சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News