செய்திகள்

கவர்னர்- அரசு மோதலால் மாநில வளர்ச்சி பாதிப்பு: ரங்கசாமி பரபரப்பு புகார்

Published On 2017-03-30 16:25 GMT   |   Update On 2017-03-30 16:25 GMT
அரசு முழு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு முழு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. முழு பட்ஜெட் சமர்பிக்காத காரணம் என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்.

அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. மாநிலத்தில் ஒரு வளர்ச்சியும் இல்லை. எம்எல்ஏ நிதியும் தரவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீடும் தரவில்லை.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. நிரந்தர பணி ஆணையை ரத்து செய்துவிட்டு தற்காலிக ஊழியராக்கியுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு நிறுவனங்கள் லாபம் ஈட்டவும், ஏஎப்டி மில்லை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் எதுவும் நடக்க வில்லை. அரசின் ஒரே சாதனை பணியாளர்களை பணிநீக்கம் செய்ததுதான். ஆட்சியாளர்கள் கவர்னர் இடையிலான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் யார் ஆணையை செயல் படுத்துவது? என தெரியாமல் தவிக்கின்றனர். அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அமைச்சர்களே பேசுகின்றனர்.


எம்எல்ஏக்களுக்கும் உரிய மரியாதை இல்லை. சட்டபேரவையில் உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தருவதில்லை. அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News