செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் தீபாவை கட்டி பிடித்து மகிழ்ந்த குடிசைப் பகுதி பெண்கள்

Published On 2017-03-30 09:49 GMT   |   Update On 2017-03-30 09:49 GMT
நேரு நகரில் உள்ள குடிசை பகுதிக்கு ஜெ.தீபா பிரசாரத்திற்கு சென்றபோது அங்குள்ள பெண்கள் அவரை பார்த்ததும், எங்கள் அம்மாவே (ஜெயலலிதா) வந்துட்டாங்க என்று கூறியபடி மகிழ்ச்சியில் கட்டி அணைத்து கொண்டனர்.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசார களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முக்கிய கட்சி வேட்பாளர்கள் தெரு தெருவாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதுகிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவாளர்களும் கூட்டம் கூட்டமாக சென்று ஜெ.தீபாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இன்று காலை ஜெ.தீபா தனது பிரசாரத்தை வைத்தியநாத அய்யர் பாலத்தில் இருந்து தொடங்கினார். வேனில் சென்ற அவர் குறுகலான சாலைகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதா போல கைகூப்பி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

நேரு நகரில் உள்ள குடிசை பகுதிக்கு ஜெ.தீபா சென்ற போது அங்குள்ள பெண்கள் அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஓடி வந்தனர். எங்கள் அம்மாவே (ஜெயலலிதா) வந்துட்டாங்க என்று கூறியபடி ஜெ. தீபாவை கட்டி அணைத்து கொண்டனர்.

அவர்களை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட தீபா புன்முறுவலுடன் ஆதரவு கேட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு கேட்டார். அப்போது வீட்டு மாடிகளில் இருந்து பெண்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

Similar News