செய்திகள்

கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு: சட்டசபையில் சபாநாயகரை அ.தி.மு.க. முற்றுகை

Published On 2017-03-30 07:21 GMT   |   Update On 2017-03-30 07:21 GMT
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக விவாதம் நடத்த வலியுறுத்திய அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் சபாநாயகரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் எழுந்து பேச தொடங்கினர்.

கவர்னரின் தூண்டுதலின்பேரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது பொய் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தினார். சபாநாயகர் அவர்களை பேச அனுமதிக்கவில்லை.

இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு எழுந்து சென்று முற்றுகையிட்டனர். அப்போது சபை காவலர்கள் சுவர்போல நின்று சபாநாயகர் இருக்கை அருகே செல்லவிடாமல் தடுத்தனர்.

இதனால் எம்.எல்.ஏ.க்கள், சபை காவலர்கள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.


அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன் ஆகியோர் எழுந்து, எம்.எல்.ஏ.க்களின் உரிமை மீறல் குறித்து பேசுகின்றனர். அதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி அ.தி.மு.க. உறுப்பினர்களிடம், உங்கள் கருத்துக்களை பேச அனுமதிக்கிறோம், பதிலும் தருகிறோம் என்றார். இதையடுத்து அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் இருக்கைக்கு திரும்பினர்.

அப்போது அன்பழகன், எம்.எல்.ஏ. பாஸ்கர் மீது பொய்வழக்கு தொடர்பாக சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றனர். இதற்கு அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Similar News