செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதல்: பொதுப்பணித்துறை என்ஜினீயர் பலி

Published On 2017-03-29 15:12 GMT   |   Update On 2017-03-29 15:12 GMT
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா காணக்கிளிய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 55). இவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக (நீர்வள ஆதார அமைப்பு) பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை, ஆலத்தூர் தாலுகா கொட்டரை நீர்த்தேக்க கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பெரம்பலூர்-அரியலூர் மெயின்ரோடு அருமடல் பிரிவு பாதை அருகில் சென்ற போது பின்னால் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பாலசுப்ரமணியன் தலை மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்ஜன்சிங்கை (41) போலீசார் கைது செய்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்சியில் இருந்து பாலசுப்ரமணியனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள், பாலசுப்ரமணியனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பாலசுப்ரமணியனின் குடும்பத்தினருக்கு, பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.

விபத்தில் இறந்த பாலசுப்ரமணியன் தனது மனைவி ருக்மணியுடன் (48) திருச்சி கே.கே.நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு சிவசங்கர் (22) என்ற மகனும், சுபாஷினி (15) என்ற மகளும் உள்ளனர். இதில் சிவசங்கர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சுபாஷினி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருவதால் திருச்சியில் உள்ள பள்ளியில் சமூக அறிவியல் பாட தேர்வினை நேற்று எழுதி கொண்டிருந்தார். தந்தை இறந்த தகவல் அறிந்த சுபாஷினி தேர்வு எழுதி முடித்தவுடன் கதறிய படியே வெளியே வந்தார். அவருக்கு சக மாணவ, மாணவிகள் ஆறுதல் கூறினர்.

Similar News