செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்திய 14 விசைப்படகுகள் பறிமுதல்

Published On 2017-03-25 07:35 GMT   |   Update On 2017-03-25 07:35 GMT
தஞ்சை மாவட்டத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்திய 14 விசைப்படகுகள், மீன்பிடி உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பேராவூரணி:

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிப்பட்டினம் உள்பட பல கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

தற்போது போதிய அளவு மழை பெய்யாததால் கடலில் மீன்வளம் குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடலில் மீன்வளத்தை பாதுகாக்க சலங்கை வலை, சுருக்குமடி, இரட்டை மடி வலை உள்ளிட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய கடல் பகுதிகளில் இரட்டைமடி வலையில் மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் மோகன்ராஜ், தீனதயாளன், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் வில்வநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சாகுல், ரகுமத்துல்லா, ஹைதர்அலி, மற்றொரு சாகுல், சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம், முருகையன், ராஜேந்திரன், நாகூர்கனி, ஜோனன்ராஜ், அய்யாதுரை, நீலகண்டன், வடிவழகன், மீனவராஜன், அன்சாரி ஆகியோருக்கு சொந்தமான 14 விசைப்படகுகளில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து 14 விசைப்படகுகள், மீன்பிடி உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News