செய்திகள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் டெபாசிட் புகார்: கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2017-03-25 05:40 GMT   |   Update On 2017-03-25 05:40 GMT
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் டெபாசிட் புகாரால் கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினரின் சோதனையால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்:

கடந்த நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் பலர் தாங்கள் கணக்கு வைத்துள்ள கூட்டுறவு வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்ததாக கூறப்பட்டது. இதனால் தமிழகத்தில் சேலம் உள்பட முக்கிய நகரங்களில் கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் தாராபுரம் கூட்டுறவு வங்கியிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் டெபாசிட் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று மதியம் 1 மணியளவில் வருமானத்துறையினர் கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். பின்னர் வங்கி மேலாளர் அனில்குமாரிடம் , நவம்பர் 8-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள விவரம், மற்றும் 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டுகளில் டெபாசிட் அதிகரித்துள்ளதா? மற்றும் வரவு -செலவு கணக்குகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். மேலும் இதுதொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் சரிபார்த்தனர்.

பின்னர் மாலை 5 மணி யளவில் சோதனையை முடித்து கொண்டு வருமான வரித்துறையினர் புறப்பட்டு சென்றனர்.

கூட்டுறவு வங்கியில் சுமார் 4 மணி நேரமாக வருமான வரித்துறையினரின் சோதனையால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News