செய்திகள்

இரட்டை இலை சின்னம் புதுவையில் முடக்கம் இல்லை

Published On 2017-03-25 04:45 GMT   |   Update On 2017-03-25 04:45 GMT
புதுவையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என்றும் அ.தி.மு.க. பெயரையும் தொடர்ந்து பபன்படுத்தலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
புதுச்சேரி:

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என இரு அணிகளாக உள்ளது. இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

ஆனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்காமல் அதனை முடக்கி வைத்தது. மேலும் அ.தி.மு.க. பெயரை இரு அணியினரும் பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டது.

ஆனால் புதுவையில் இந்த தடை பொருந்தாது என தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏனெனில் அ.தி.மு.க. அகில இந்திய கட்சி அல்ல என்றும், தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற கட்சி. அதுபோல் புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க. தனியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இரட்டை இலை சின்னம் பிரச்சனையை தேர்தல் கமி‌ஷனுக்கு கொண்டு சென்றதால் அவர்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தார்கள். ஆனால், புதுவையில் இந்த பிரச்சனையை கொண்டு செல்லவில்லை.


எனவே, புதுவையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என்றும் அ.தி.மு.க. பெயரையும் தொடர்ந்து பபன்படுத்தலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

புதுவையில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் சசிகலா அணியில் உள்ளனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பன்னீர் செல்வம் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News