செய்திகள்

ஊட்டியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2017-03-23 17:11 GMT   |   Update On 2017-03-23 17:11 GMT
ஊட்டியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி:

உலக தண்ணீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 22–ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்து கூறியதாவது:–

‘நீரின்றி அமையாது உலகு‘ என்ற சொல்லுக்கேற்ப மழைநீரை சேமிப்பது குறித்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.

தற்போது மழைபெய்யும் நாட்கள் குறைந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்க வேண்டும். மேலும் மழை நீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். மாநிலத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகளுக்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு பேரணி ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே தொடங்கி லோயர் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதியில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், ஊட்டி ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் உள்பட மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News