செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே டெய்லர் கொலையில் கூலிப்படையை சேர்ந்த வாலிபர் கைது

Published On 2017-03-22 17:26 GMT   |   Update On 2017-03-22 17:26 GMT
பட்டுக்கோட்டை அருகே தையல் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கூலிப்படையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது37). தையல் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த விஜயகுமாரை 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விஜயகுமார் கொலை வழக்கு தொடர்பாக நாட்டுச்சாலை கீழத்தெருவை சேர்ந்த கார் டிரைவர் வினோத் (23) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி சுப்பிரமணியனிடம் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது அவர் விஜயகுமாரை கொலை செய்த கூலிப்படைக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

பட்டுக்கோட்டை பாளையம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (19) என்பதும், கூலிப்படையைச் சேர்ந்த அவர் விஜயகுமார் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த முத்துப்பேட்டை கோவிலூரை சேர்ந்த ராஜேஷ், வேதாரண்யம் கோபாலக்காட்டை சேர்ந்த சுதாகரன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News