செய்திகள்

ரெயில்களில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு சதாப்தியில் ‘சீட்’ ஒதுக்கப்படும்

Published On 2017-03-22 06:27 GMT   |   Update On 2017-03-22 06:27 GMT
மெயில், எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சம்பந்தப்பட்ட ரெயிலில் இடம் கிடைக்காவிட்டால் ராஜ்தானி, சதாப்தியில் ‘சீட்’ ஒதுக்கப்படும் திட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை:

எக்ஸ்பிரஸ், மெயில் ரெயில்களில் பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், ராஜ்தானி, சதாப்தி , தூரந்தோ போன்ற ரெயில்கள் பெரும்பாலும் காலியாக செல்கின்றன.

இது ரெயில்வே துறைக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் டிக்கெட் உறுதி செய்யாததால் கட்டணம் திருப்பி கொடுக்கப்படுகிறது.

இத்தகைய நிலையை மாற்ற ரெயில்வே துறை புதிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. மெயில், எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சம்பந்தப்பட்ட ரெயிலில் இடம் கிடைக்காவிட்டால் வேறு ரெயிலில் பயணிக்க விரும்புவதாக முன்பதிவு செய்யும் போதே குறிப்பிடும் திட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அது போல விரும்பும் பயணிகளுக்கு அவர்கள் செல்லும் ஊருக்கு இயக்கப்படும் சதாப்தி, ராஜ்தானியில் இடம் இருக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வித்தியாச தொகை குறைவாக இருந்தாலும் திருப்பி வழங்கப்படமாட்டாது.


இது குறித்து ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயிலின் முன் பதிவு செய்த பயணிகள் இடம் கிடைக்காதது போன்ற காரணங்களால் தங்கள் பயணத்தை ரத்து செய்கின்றனர்.

இந்த வகையில் ஆண்டுக்கு ரூ. 7500 கோடி பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்கும். இது பயணிகளுக்கு உதவுவதோடு, டிக்கெட் ரத்து காரணமாக பயணிகளுக்கு பணம் திருப்பி கொடுப்பது தடுக்கப்படும்.

இந்த திட்டம் தற்போது டெல்லியில் இருந்து லக்னோ, ஜம்மு, மும்பை செல்லும் தடங்களில் மட்டும் கடந்த நவம்பர் மாதம் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது அதன் படி பயணிகள் மாற்று பயண வாய்ப்பை ஆன்லைனில் மட்டுமே தற்போது தேர்வு செய்ய முடியும்.

இதை முன்பதிவு மையங்களில் டிக்கெட் வாங்கு வோருக்கும் விரிவுப்படுத்த சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News