செய்திகள்

மீனவர் சுட்டுக்கொலை: சர்வதேச போலீஸ் மூலம் இலங்கை கடற்படை வீரரை கைது செய்ய வேண்டும்- அன்புமணி

Published On 2017-03-18 10:32 GMT   |   Update On 2017-03-18 10:32 GMT
மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை சர்வதேச போலீஸ் மூலம் கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி எம்.பி. கூறினார்.

அவனியாபுரம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ரூ1 கோடியும், காயம் அடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் நிதி உதவி வழங்க வேண்டும்.


இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேச உள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேச உள்ளேன். கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமானதாகும். இதற்கான ஆவணங்கள் உள்ளன.

1974-ல் போடப்பட்ட இந்திராகாந்தி- பண்டார நாயகா ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர வைக்கவும் உரிமம் உள்ளது.

அப்போது நடைபெற்ற தி.மு.க. ஆட்சி காலத்தில் இதற்கு பெயரளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்போது இந்திரா காந்தியும் தி.மு.க. அரசை மிரட்டி உள்ளார்.

இப்போதைய மோடி அரசு, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கையை தட்டிக் கேட்க பலம் இல்லையா? என்பது தெரியவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போது திருமங்கலம் பார்முலா உருவாகி உள்ளது.

ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரர் மீது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சர்வதேச போலீஸ் மூலம் அந்த வீரரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News