செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2017-03-16 11:31 GMT   |   Update On 2017-03-16 11:31 GMT
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
கோவை:

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு ‘சில்க் ஏர்’ விமானம் வந்தது.

இந்த விமானத்தில் பயணிகள் சிலர் உரிய வரி கட்டாமல் அதிக அளவு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் 7 பயணிகள் தங்கள் சூட்கேசில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வளவு சிகரெட் பாக்கெட்டுகளை ஏன் கொண்டு வந்தீர்கள்? இவ்வளவு பாக்கெட்டுகளை கொண்டு வருவதற்கு உரிய வரி செலுத்தி இருக்கிறீர்களா? என சுங்க அதிகாரிகள் கேட்டனர். அதற்கு பயணிகள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சிகரெட் பாக்கெட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வந்ததற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்துகிறோம் என பயணிகள் கூறி உள்ளனர். இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இன்று சிகரெட் பாக்கெட்டுகளுக்கு உரிய வரியை செலுத்திய பிறகு அவை பயணிகளிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News