செய்திகள்

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் முற்றுகை

Published On 2017-03-07 17:46 GMT   |   Update On 2017-03-07 17:46 GMT
ஏரிகளை தூர்வார வலியுறுத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பென்னாகரம் ஒன்றியம் கோடியூர், எட்டியாம்பட்டி, ஏர்கொல்லனூர், போடூர், நீர்குந்தி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளை தூர்வார வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:–
நீர்வளம் பாதிப்பு

பென்னாகரம் பேரூராட்சியை சுற்றியுள்ள 5 கிராமங்களில் உள்ள அனுமந்தபுரம் தேசிநாயக்கனஅள்ளி ஏரி, கோட்ட ஏரி, நீர்குந்தி ஏரி, போடூர் ஏரி, மாரோஜனஅள்ளி ஏரி, அனுமந்தே நாயக்கன ஏரி ஆகிய 6 ஏரிகளை தூர்வார வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் நீர்வளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக ஏரிகளை தூர்வாராததால் அந்த பகுதியில் விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த 6 ஏரிகளை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவதுடன் அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். மேலும் சுற்றுப்பகுதியில் நீர்வளம் பெருகும். எனவே இந்த ஏரிகளை தூர்வார போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News