செய்திகள்

வேலூரில் மதுக்கடையில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்: பா.ம.க.வினர் 20 பேர் கைது

Published On 2017-03-01 12:20 GMT   |   Update On 2017-03-01 12:20 GMT
வேலூரில் மதுக்கடை போர்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவற்றை மூடாமல் 500 மதுக்கடைகளை மூடியதாக தமிழக அரசு கூறி பொதுமக்களை ஏமாற்றுவதாக பா.ம.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அடையாளம் காட்டும் விதமாக அந்த மதுக்கடைகளின் போர்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் இன்று நடத்தப்படும் என்று பா.ம.க. இளைஞரணி அறிவித்தது.

அதன்படி வேலூரில் இந்த போராட்டம் நடந்தது. ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடையில் பா.ம. க.வினர் குவிந்தனர்.

மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் துணை பொதுச் செயலாளர் இளவழகன், மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தலைவர் புருஷோத்தமன், முன்னாள் எம்.பி. என்.டி சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அந்த மதுக்கடை முன்பு இருந்த போர்டில் ஸ்டிக்கரை ஒட்டினர். அந்த ஸ்டிக்கரில், ‘‘இது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோதமான மதுக்கடை-பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வெளியிடுவோர் பா.ம.க. இளைஞரணி’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற வேலூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 20 பேரை கைது செய்தனர்.

இதேபோல ஜோலார்பேட்டையிலும் 15 மதுக்கடைகள் முன்பு போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் பொன்னுசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குட்டிமணி, மகளிர் அணி செயலாளர் நிர்மலா ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே. ராஜா, நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து ஸ்டிக்கர் ஒட்டிய 50 பேரை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Similar News