செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு: முதல்வர், தலைமைச் செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2017-02-27 10:46 GMT   |   Update On 2017-02-27 10:46 GMT
தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது
சென்னை:

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். மேலும், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி சட்டசபையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தார். ஆனால், தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் வலியுறுத்தினர்.



எதிர்க் கட்சியினரின் கோரிக்கைகளை சபாநாயகர் தனபால் நிராகரித்ததால், தி.மு.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவைக் காவலர்களை கொண்டு தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தி முடித்தார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.

எதிர்க் கட்சியினரை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 5 பேர் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் மற்றும் மத்திய உள்துறை செயலாளர், ஆளுநரின் செயலர் ஆகியோர் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். வாக்கெடுப்பு நாளன்று சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான காட்சிப் பதிவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், இவ்வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை மார்ச் மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News