செய்திகள்

தி.மு.க உறவில் விரிசல்: திருநாவுக்கரசரை மாற்ற திட்டமா?

Published On 2017-02-27 06:45 GMT   |   Update On 2017-02-27 06:45 GMT
கூட்டணி கட்சியுடன் இணக்கமான போக்கு இல்லாததால் திருநாவுக்கரசரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை:

தமிழக, காங்கிரசை பொறுத்தவரை கட்சிக்கென்று பொதுவான நிலைப்பாடு இருப்பதில்லை. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும்.

ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால் கட்சி முன்னேற்றத்தை நோக்கி நகருவதில்லை. தலைவர்கள் மாற்றப்படுகிறார்கள். ஆனால் தலைவிதி மாறுவதில்லை.

காங்கிரசும் அதன் கோஷ்டி சண்டையும் பிரிக்க முடியாதது என்பது அறிந்ததே. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்றி விட்டு திருநாவுக்கரசர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் எந்த கோஷ்டியையும் சேராதவர். எனவே கோஷ்டி சண்டை முடிவுக்கு வரும். கட்சி வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறாகிவிட்டது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 41 தொகுதிகளை பெற்று 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற முடிந்தது. தி.மு.க வின் ஆட்சிக் கனவு பறிபோனதற்கு காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததும் ஒரு காரணம் என்று பேச்சும் அடிபட்டது.

இதன் காரணமாக அடுத்து அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 சதவீத இடங்கள் மட்டுமே கொடுப்பதற்கு தி.மு.க சம்மதித்தது.

தி.மு.க வுக்கும் திருநாவுக்கரசருக்கும் ஒரு இணக்கமான போக்கு ஏற்படவில்லை. பல போராட்டங்களில் தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை திருநாவுக்கரசர் மேற்கொண்டது தி.மு.க தலைவர்களை அதிருப்தி அடைய வைத்தது.

கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணிக்கு ஆதரவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தி.மு.க- காங்கிரஸ் உறவில் விரிசல் விழுந்தது.

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதி.மு.க பிளவுபட்டபோது சசிகலா அணியை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. ஆனால் திருநாவுக்கரசர் அந்த அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது கூட்டணி உறவில் விரிசலை அதிகமாக்கியது.

ப.சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அதிருப்தி அடைந்தனர்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பது என்று தி.மு.க முடிவெடுத்தது.

ஆனால் காங்கிரஸ் முடிவை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தன்று காலையில் தான் தி.மு.க நிலைப்பாட்டுக்கு ஆதரவு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லிக்கு ஜனாதிபதியை சந்திக்க சென்ற தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரையும் சந்தித்தார்.


அப்போது டெல்லியில் இருந்த திருநாவுக்கரசரும் உடன் சென்றதாகவும் ஆனால் சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின் மூவரும் தனியாக ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது திருநாவுக்கரசர் தலைமையின் மீது மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. அடுத்து பராளுமன்ற தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் கூட்டணி கட்சியுடன் இணக்கமான தலைவராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. எனவே திருநாவுக்கரசரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Similar News