செய்திகள்

3 பேர் பலியான விபத்து: ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் பொதுமக்களிடம் விசாரணை

Published On 2017-02-24 07:07 GMT   |   Update On 2017-02-24 07:07 GMT
விபத்து நடந்த இடத்தை ரெயில்வே பாதுகாப்பு சீனியர் ஆணையர் அஷ்ரப் நேரில் சென்று இன்று பொதுமக்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

சென்னை:

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த விரைவு மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 3 பேர் நேற்று பலியானார்கள். ஒரு பயணியின் முதுகின் பின்புறம் தொங்க விட்டு இருந்த ‘பை’ சிக்னல் கம்பத்தில் சிக்கி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பிரவீன் ராஜ், மணிகண்டன், சாருலெஸ் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் கள். படிக்கட்டில் தொங்கி கொண்டே அஜாக்கிரதையாக பயணம் செய்ததால் இந்த விபத்தில் சிக்கினர்.

இது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து நடந்த இடத்தை ரெயில்வே பாதுகாப்பு சீனியர் ஆணையர் அஷ்ரப் நேரில் சென்று இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்தினார்.

பரங்கிமலை ரெயில் நிலையத்தை அடுத்த சிக்னல் கம்பம் அருகில் குடியிருக்கும் பொதுமக்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

அங்கு இருந்த ரெயில்வே ஊழியர்களிடம் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி கேட்டறிந்தார். படிக்கட்டில் பயணம் செய்த பயணிகள் மீது தவறா? அல்லது மின்சார ரெயில் வேகமாக இயக்கப்பட்டதா? சிக்னல் கம்பம் அமைக்கப்பட்ட இடத்தில் தவறு உள்ளதா? என்று விசாரித்தார்.

Similar News