செய்திகள்

உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் திடீர் மாற்றம்

Published On 2017-02-23 09:26 GMT   |   Update On 2017-02-23 09:26 GMT
உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட 11 நாட்களில் டேவிட்சன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தி பணியாற்றி வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் திடீரென விடுமுறையில் சென்றார்.

இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது கடந்த 13-ந்தேதி உளவுத்துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அவர் உளவுதுறைக்கு திரும்பினார். விடுப்பில் சென்ற சத்தியமூர்த்தி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்னை காவல் துறை நலவாழ்வு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த பணியிட மாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அபூர்வா வர்மா உத்தரவில் தெரிவித்துள்ளார்.



உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட 11 நாட்களில் டேவிட்சன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி உளவுத்துறை ஐ.ஜி.யாகும். இந்த இடம் தற்போது காலியாக உள்ளது.

உளவுத்துறை புதிய ஐ.ஜி.யாக யார் நியமிக்கப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News