செய்திகள்

மாணவிகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட 3 ஆசிரியர்களுக்கு வெட்டு: வாலிபர்கள் தாக்குதல்

Published On 2017-02-20 10:20 GMT   |   Update On 2017-02-20 10:20 GMT
மாணவிகளை கேலி செய்ததை தட்டிக்கேட்டபோது போலீசார் முன்னிலையில் 3 ஆசிரியர்கள் மீது வாலிபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு தனியார் டியூசன் சென்டர் இயங்கி வருகிறது.

இங்கு தவளக்குப்பம், அரியாங்குப்பம், நோனாங்குப்பம் பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மையத்துக்கு வரும் மாணவிகளை அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் கேலி-கிண்டல் செய்து வந்தனர். நேற்று மாலை வகுப்புக்கு வந்த மாணவிகளை அந்த வாலிபர்கள் மீண்டும் கிண்டல் செய்தனர்.

இதுகுறித்து டியூசன் சென்டர் சார்பில் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் டியூசன் மையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென ஆசிரியர்கள் தமிழரன், ஜெய்சங்கர், அன்பரசன் ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள்.

போலீசார் விசாரித்து கொண்டிருக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. பின்னர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அரியாங்குப்பம் ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் அங்கே நின்று கொண்டிருந்தனர். இதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தாக்குதல் நடத்திய வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாக்குதல் நடத்தியதாக அந்த பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News