செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சலுக்கு அனுமதி

Published On 2017-01-30 03:59 GMT   |   Update On 2017-01-30 03:59 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 2 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக கோவை,திருப்பூர், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் பாதிப்புள்ளான சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சுமதி (வயது 60), காரமடையை சேர்ந்தவர் பழனிசாமி (58). இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனையடுத்து அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களது ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அவர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

எனவே அவர்கள் 2 பேரையும் டாக்டர்கள் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Similar News