செய்திகள்

ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம்

Published On 2017-01-29 17:10 GMT   |   Update On 2017-01-29 17:10 GMT
ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்:

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சங்க திருச்சி மண்டல அளவிலான கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சேதுமாதவன் தலைமை தாங்கினார். ராமு வரவேற்றார். மாநில தலைவர் திருகண்ணன் சிறப்புரை ஆற்றினார்.

ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பொதுச்செயலாளர் விக்ரம்சிங், பிரசார செயலாளர் இவான்ஸ்டின், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தான், சங்க பொறுப்பாளர் கணேஷ்குமார் உள்பட பலர் பேசினார்கள். அமைப்பு செயலாளர் செந்தில்குமார் விளக்க உரையாற்றினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களை ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மண்டல, மாவட்ட அளவில் உண்ணாவிரதம், தர்ணா போராட்டம் நடத்துவது, மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக சென்னையில் மாநில அளவில் நடத்த உத்தேசித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட திருச்சி மண்டலத்தில் இருந்து அதிகளவில் உறுப்பினர்கள் கலந்துகொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News