செய்திகள்

தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி: சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவிகள் அணி வெற்றி

Published On 2017-01-29 02:31 GMT   |   Update On 2017-01-29 02:31 GMT
பெங்களூரில் நடைபெற்ற தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் செயல்படும் சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவிகள் அணி வெற்றி பெற்றனர்.
சென்னை:

பெங்களூரு நேஷனல் சட்டப் பல்கலைக்கழகம், சட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியை பெங்களூருவில் நடத்தியது. இந்த போட்டியில், ‘விலங்குகள் பாதுகாப்பு’ தொடர்பான பொதுநல வழக்கை தாக்கல் செய்து மாணவர்கள் வாதிட வேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் செயல்படும் சீர்மிகு சட்டக்கல்லூரி உள்பட நாடு முழுவதும் இருந்து 48 சட்டக்கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த மாதிரி நீதிமன்றத்தின் நீதிபதிகளாக, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர் ஆகியோர் செயல்பட்டனர். 48 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களின் மனுக்களை ஆய்வு செய்து, அவர்களது வாதங்களை கேட்டறிந்து, இறுதியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின், சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவிகள் எஸ்.கோபிகா, வி.பகவதி, சினேகா பிரதீப் ஆகியோர் கொண்ட அணி வெற்றிப் பெற்றதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இவர்கள் விலங்குகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்த வழக்கு மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்ய பெங்களூரு நேஷனல் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி எஸ்.கோபிகா, சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி கே.கே.சசிதரனின் மகள் ஆவார். அதேபோல மாணவி வி.பகவதி, சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் வி.சண்முகத்தின் பேத்தியும், வக்கீல் எஸ்.வெண்ணிமாலையின் மகளும் ஆவார்.

Similar News