செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்: நாராயணசாமி

Published On 2017-01-19 06:46 GMT   |   Update On 2017-01-19 06:46 GMT
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என பிரதமருக்கு, நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அறிவிக்காத இந்த நேரத்தில் தமிழகத்தில் மாணவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவையிலும் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடைபெற்று வந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது என்று தமிழக அரசின் சார்பில் குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளிலும் பல முறை கோரிக்கை வைத்தும் உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்காதது வருத்தம் அளிக்கிறது.

ஜல்லிக்கட்டால் காளைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. உச்சநீதிமன்றம் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சிலம்பாட்டம், குத்து சண்டை போன்ற பல வீர விளையாட்டுகள் தொன்று தொட்டு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்காத பட்சத்தில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு மோடி அரசு செவி சாய்க்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தற்போது இந்த பிரச்சனையில் மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த புதுவை அரசு முழுமையான ஆதரவு அளிக்கிறது. புதுவை மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

மாணவர்கள் தங்கள் போராட்டத்தை அறப்போராட்டமாக நடத்த வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. அப்போது தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.

பிரதமர் மோடி அவசர சட்டத்தை கொண்டு வந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Similar News