செய்திகள்

சோழவந்தான் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2017-01-13 09:04 GMT   |   Update On 2017-01-13 09:04 GMT
சோழவந்தான் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவந்தான்:

சோழவந்தான் அரசு பஸ் டிப்போ எதிரில் பால்கண்ணன் என்பவரின் மனைவி ராமாயி வயது(62), டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இருவாலிபர்கள் பீடி வாங்கிகொண்டு அருகில் உள்ள பட்டியகல்லில் அமர்ந்து பீடி குடித்துக்கொண்டு இருந்தனர். அப்பொழுது ராமாயியின் மருமகளும் மற்றும் சிலர் பஸ் ஏறி சென்று விட்டனர்.

இதை அறிந்த வாலிபர்கள் தனியாக இருந்த ராமாயியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுக்க சென்ற ராமாயியிடம் ஒரு வாலிபர் 5 பவுன் தங்க செயினை அறுத்துக்கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் மற்றொரு வாலிபருடன் தப்பி சென்று விட்டனர்.

கடந்த சனி பிரதோசதன்று திருவேடகத்தில் 3 பெண்களிடமும், சோழவந்தான் சிவன் கோவிலில் 2 பெண்களிடமும் ஒரே சமயத்தில் நகை கொள்ளை போனது. இதே போல் மார்க்கெட் ரோட்டில் கடையை உடைத்து பொருட்களை அள்ளி சென்றுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக நின்ற மொபடை திருடி சென்றுள்ளனர். இதே போல் இப்பகுதியில் தொடர்ந்து திருடு, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சதுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு இதே ராமாயியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை அறுக்க முயற்சித்தபோது ராமாயி சத்தம் போட்டவுடன் எதிரே அரசு பஸ் டிப்போ காவலாளி அந்த திருடர்களை விரட்டிசென்றார். ஆனால் அவர்கள் மெயின் ரோட்டில் வெகுதூரம் ஓடி அருகில் வாழைத்தோட்டத்தில் தப்பி சென்று விட்டனர். இப்பகுதியில் மிரட்டி வரும் கொள்ளையர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாத்து அச்சமின்றி வாழ துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி குடியிருப்போர் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News