செய்திகள்

சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனவரி 19 வரை நீதிமன்ற காவல்

Published On 2017-01-06 13:53 GMT   |   Update On 2017-01-06 13:53 GMT
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரையும் ஜனவரி 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி, கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரி துறையினர் கடந்த மாதம் 8-ந்தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

சென்னை மற்றும் வேலூரில் உள்ள சேகர் ரெட்டியின் வீடுகளில் இருந்து 131 கோடி ரூபாய் பணமும், 170 கிலோ தங்க நகைகளும் கிடைத்தன. இதில் ரூ.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகளாக இருந்தது.

இதனை தொடர்ந்து சேகர் ரெட்டியின் சகோதரர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மணல் வியாபாரத்தில் கோடிகளை குவித்த சேகர் ரெட்டி, அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரது துணையுடன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிய சேகர் ரெட்டி முறையாக வருமான வரியை கட்டி இருக்கிறாரா? என்பதை கண்டுபிடிப்பதற்காகவே சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதும், கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டதும் வருமானவரி துறை அதிகாரிகளை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையுமே அதிர்ச்சி அடைய செய்தது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சேகர் ரெட்டியையும், அவரது கூட்டாளிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சேகர் ரெட்டி, அவரது சகோதரர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோர் 22-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரின் 2 நாள் சி.பி.ஐ.காவல் முடிந்து இன்று மீண்டும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இரண்டு நாள் சிபிஐ காவல் போதவில்லை என்பதால் மீண்டும் காவலில் எடுக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பாமல், மூவரையும் ஜனவரி 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரேம்குமார் உள்ளிட்ட 3 பேருக்கும் ஜனவரி 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது இருந்தது.

Similar News