செய்திகள்

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசு

Published On 2017-01-06 02:36 GMT   |   Update On 2017-01-06 02:36 GMT
ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

இதுகுறித்து தமிழக வணிகவரி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (ஜி.எஸ்.டிஎன்.) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (டி.ஐ.என்.) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். 1.1.2017 முதல் இந்த பதிவை வணிகர்கள் மேற்கொள்ளலாம்.

இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு, வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்படும்.

தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி. இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை பூர்த்தி செய்ய வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https://ctd.tn.gov.in இணையத்தில் உள்ள உதவி கோப்பை (ஹெல்ப் பைல்) பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகவரித்துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரிவிதிப்பு வட்டங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News