செய்திகள்

ரூ.21 லட்சம் தகராறில் தொழிலதிபரை கடத்திய 3 பேர் சிக்கினர்

Published On 2016-12-31 06:15 GMT   |   Update On 2016-12-31 06:15 GMT
ஆம்பூரில் பணத்தகராறில் தொழிலதிபரை கடத்திய 3 பேர் கும்பல் நெமிலியில் சிக்கினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெமிலி:

ஆம்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபர். இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவரிடம் மொத்தமாக இரும்பு கம்பிகளை விலைக்கு வாங்கி விற்று வந்தார்.

சிவக்குமார் இரும்பு கம்பிகளை வாங்கியதில் வெற்றிவேலுக்கு சுமார் ரூ.21 லட்சம் ரொக்கப்பணம் தர வேண்டும் என கூறப்படுகிறது. பணத்தை தராமல் சிவக்குமார் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் வெற்றி வேல் ஆத்திரமடைந்தார்.

ரூ.21 லட்சம் கொடுக்கல், வாங்கல் தகராறு மூண்டது. சிவக்குமாரை மிரட்டி பணத்தை மீட்க வெற்றிவேல் திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஆம்பூரிலேயே வைத்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சிவக்குமாரை கடத்தினர்.

ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி ரூ.21 லட்சம் பணத்தையும் கேட்டனர். அவ்வளவு பணம் தற்போது தன்னிடம் இல்லை என சிவக்குமார் கூறினார். ஆனாலும் விடாபிடியாக பணத்தை கேட்டு மிரட்டினர். ஒரு கட்டத்தில் மிரட்டலுக்கு அடிபணிந்த சிவக்குமார், நெமிலியில் தனக்கு சொந்தமாக நிலம் உள்ளது.

அந்த நிலத்தை, பணத்திற்கு பதிலாக எடுத்துக் கொள்ளவும் என்று கூறினார். கடத்தல் கும்பல் சிவக்குமாரை காரில் கடத்தியபடியே நிலத்தை பார்ப்பதற்காக நெமிலிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே சிவக்குமார் கடத்தப்பட்ட விவகாரம், அவரது தாய் ரேணுகாவுக்கு தெரியவந்தது. அவர், ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சிவக்குமாரின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர்.

சிக்னலை வைத்து கடத்தல் கும்பலின் காரை ஆம்பூர் போலீசார் பின் தொடர்ந்தனர். கார், நெமிலி பகுதியில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆம்பூர் தாலுகா போலீசார், நெமிலி போலீசாருக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர்.

நெமிலி போலீசார், கடத்தல் கும்பலின் காரை கண்டு பிடித்து நெருங்கினர். போலீசாரை பார்த்ததும், கடத்தல் கும்பல் தப்ப முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்தனர். கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரும் பிடிபட்டனர்.

விசாரணையில் சீனிவாசன், சவுந்தரராஜன், வெற்றிவேல் ஆகியோர் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசாரிடம் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரையும், கடத்தப்பட்ட தொழிலதிபர் சிவக்குமாரையும் நெமிலி போலீசார் ஒப்படைத்தனர்.

பிடிபட்டவர்களை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News