செய்திகள்

காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை அரசே நிர்ணயிக்க கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

Published On 2016-12-27 17:20 GMT   |   Update On 2016-12-27 17:20 GMT
விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை தவிர்க்க காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடுவட்டம் கிளை சார்பில் ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நீலகிரியில் தற்போது காய்கறிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் கேரட் விதைப்பு முதல் அறுவடை வரை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஆனால் அறுவடை செய்தபின்னர் தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ.30 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதேபோல் முட்டைகோஸ் பயிரிட ரூ.29 ஆயிரம் செலவு ஆகிறது. ஆனால் விளைச்சலுக்கு பின்னர் ரூ.9 ஆயிரம் மட்டுமே விலை கிடைக்கிறது.

இதேபோல் உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி ஒரு கிலோ கேரட் ரூ.25–எனவும், முட்டைகோஸ் ரூ.10–எனவும், உருளைக்கிழங்கு ரூ.30–என அரசே குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் தற்போது விவசாயிகள் கைவசம் உள்ள நிலங்களுக்கு அனுபவ சான்று வழங்க வேண்டும். கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தின் மூலமாக விவசாயிகளுக்கு விரைந்து கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News