செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம மோகன ராவ் இன்று வீடு திரும்புகிறார்

Published On 2016-12-25 20:11 GMT   |   Update On 2016-12-25 20:11 GMT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்புகிறார். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை திட்டமிட்டு உள்ளது.
சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, ராம மோகன ராவ் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை பிரிவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சில இருதய பரிசோதனைகள் முடிந்து தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 2-வது நாளாக நேற்று அவர் சிகிச்சை பெற்றார்.

இந்தநிலையில் ராம மோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இருவருக்கும், வருமானவரித்துறையினர் ‘சம்மன்’ அனுப்பி இருந்தனர்.

சம்மனை பெற்றுக்கொண்டு ஆஜராகாத ராம மோகன ராவ் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதேபோல் அவருடைய மகன் விவேக்கும் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை.

இதனால் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவரை அங்கு கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு ராம மோகன ராவ் இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்புகிறார்.

ராம மோகன ராவ், சென்னை அண்ணாநகர், ஒய்.பிளாக், 6-வது மெயின்ரோடு, முதலாவது தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிய பிறகு வருமானவரித்துறையினர், அவரிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரணையை தொடங்கலாம். அவருடைய வீடு அல்லது ஏதாவது ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ராம மோகன ராவ் மகன் விவேக் நடத்தி வந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு. இவர் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாவல் பணிக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆண்டுக்கு ரூ.130 கோடி மதிப்பில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News