செய்திகள்

ஜெயலலிதா உடலுக்கு நாராயணசாமி அஞ்சலி: புதுவையில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

Published On 2016-12-06 09:10 GMT   |   Update On 2016-12-06 09:10 GMT
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், புதுவையில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இன்று பிற்பகல் புதுச்சேரி முதலமைச்சரும் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான நாராயணசாமி, ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக இன்று காலையில் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஜெயலலிதாவின் மறைவுக்கு மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Similar News