செய்திகள்

பொதுநல வழக்கு தொடர்ந்தவர் நிலத்தின் மதில் சுவரை இடிக்கக் கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-12-04 02:53 GMT   |   Update On 2016-12-04 02:53 GMT
அரசு நிலத்தை பாதுகாப்பது குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தின் மதில் சுவரை இடிக்கக்கூடாது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வி.பி.ஆர்.மேனன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், பல்லாவரம் தாலுகாவில் உள்ள கோவூர் கிராமத்தில் எங்கள் குடும்பத்தினருக்கு 1.92 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றி 18 ஆண்டுகளுக்கு முன்பு மதில் சுவர் கட்டி பராமரித்து வருகிறேன்.

இந்த நிலத்துக்கு அருகேயுள்ள நிலங்களை சிலர் சுடுகாடாக பயன்படுத்தினர். சட்டவிரோதமாக பிணங்களையும் புதைக்கின்றனர். இதுகுறித்து ஏற்கனவே கலெக்டரிடம் புகார் செய்தேன்.

தற்போது அரசு புறம்போக்கு நிலத்தை பாதுகாக்க இந்த ஐகோர்ட்டில் பல பொதுநல வழக்குகளை நான் தொடர்ந்துள்ளேன். இதனால், ஆத்திரமடைந்த அரசு உயர் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள மக்களை எனக்கு எதிராக வன்முறையில் ஈடுபட தூண்டிவிடுகின்றனர்.

இதனால், 60-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். எங்கள் இடத்துக்கு செல்லும் பொது சாலையை உடைத்து எறிந்தனர். இதற்கிடையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியுள்ளதாக கூறி, எங்கள் நிலத்தின் மதில் சுவரை இடிக்க கடந்த ஜூலை மாதம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டரின் உத்தரவு உள்நோக்கம் கொண்டது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்வதுடன், சுவரை இடிப்பதற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘இந்த மனு மீது இறுதி உத்தரவை நாங்கள் பிறப்பிக்கும் வரை, மனுதாரரின் நிலத்தின் மதில் சுவரை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Similar News