செய்திகள்

உடல்நலக்குறைவால் மரணமடைந்த கோ.சி.மணி உடல் இன்று அடக்கம்

Published On 2016-12-03 05:42 GMT   |   Update On 2016-12-03 05:42 GMT
உடல்நலக்குறைவால் மரணமடைந்த கோ.சி.மணி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோ.சி.மணி இறுதிசடங்கு நடைபெறுவதையொட்டி குத்தாலத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர்:

தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி, விவசாயம், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோ.சி.மணி(வயது88). தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

கோ.சி.மணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு சுமார் 9.10 மணி அளவில் மருத்துவமனையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கோ.சி.மணி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன், மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று ஆடுதுறை வந்து கோ.சி.மணி உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். மதியம் 1.30 மணி அளவில் அவரது உடல் நாகை மாவட்டம் மேக்கரிமங்கலத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதிசடங்குகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

கோ.சி. மணியின் மனைவிகள் சாவித்திரி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.

கோ.சி.மணியின் மகன்கள் கோ.சி. இளங்கோவன், கோ.சி. புகழேந்தி, கோ.சி.அன்பழகன், கோ.சி.மதியழகன் ஆகியோர் ஆவர். இதில் கோ.சி.மதியழகன் இறந்து விட்டார். மகள்கள் தமிழரசி, கீதா, இந்திராணி, புஷ்பா, மணிமேகலை ஆகியோர் ஆவர். இதில் தமிழரசி, புஷ்பா ஆகியோர் இறந்து விட்டனர்.

கோ.சி.மணி இறுதிசடங்கு நடைபெறுவதையொட்டி குத்தாலத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

Similar News