செய்திகள்

ரூபாய் நோட்டுக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

Published On 2016-11-25 09:22 GMT   |   Update On 2016-11-25 09:22 GMT
ரூ.500, 1000 நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து புதிய நோட்டுகளாக மாற்ற போதிய கால அவகாசம் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

தமிழ்நாடு பொது நல வழக்குகள் மையத்தின் சார்பில் ரமேஷ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

‘நாடு முழுவதும் 5 லட்சம் கோடி கருப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், கையில் இருந்த பணத்தை மாற்றுவதற்காக வங்கி முன்பு வரிசையில் காத்திருந்ததாலும், நாடு முழுவதும் 33 பேர் இறந்துள்ளனர்.

தற்போது, பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து வாரத்துக்கு ரூ.25 ஆயிரமும், எடுக்கலாம். ஏ.டி.எம். எந்திரத்தில் நாளொன்றுக்கு ரூ2,500யை, வங்கிகளில் நேரடியாக சென்று பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதன் மூலமும் ரூ.4,500யை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேரடியாக ரூபாய் நோட்டுக்களை மாற்றுபவர்கள் மீண்டும் மீண்டும் வந்து பணத்தை மாற்றக்கூடாது என்பதற்காக அவர்களது கை விரலில் மை வைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள அனைவரும் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என கூறமுடியாது. எனவே, கையில் இருக்கும் பணத்தை மாற்றுவது தொடர்பாக நிரந்தர விதிமுறைகள் வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன்கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வக்கீல், இதுவரை ரூ.21 ஆயிரம் கோடி வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதவர் புதிய கணக்கு தொடங்கி டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கையில் உள்ள செல்லாத பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து புதிய நோட்டுக்களை மாற்ற போதிய கால அவகாசம் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Similar News