செய்திகள்

எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மற்றும் சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

Published On 2016-11-25 02:55 GMT   |   Update On 2016-11-25 02:55 GMT
எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மற்றும் சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமனை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மறைந்த தமிழக முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. சத்தியா ஸ்டூடியோ, எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, எம்.ஜி.ஆர். ஜானகி காது கேளாதோர் பள்ளி, ராமாவரம் தோட்டம் என்று ஏராளமான சொத்துக்களை எப்படி நிர்வகிப்பது? என்று 1987-ம் ஆண்டே எம்.ஜி.ஆர். உயில் எழுதி வைத்தார்.

அந்த உயிலில், சொத்துக்கள் மற்றும் அறக்கட்டளையை நிர்வகிக்க முதலில் என்.சி.ராகவாச்சாரியை எம்.ஜி.ஆர். நியமித்தார். இவருக்கு பின்னர், தன்னுடைய வளர்ப்பு மகள்களில் ஒருவரான லதாவின் கணவர் ராஜேந்திரனை நியமித்து இருந்தார். இவர்கள் இருவருக்கு பின்னர், இந்த சொத்துக்களை நிர்வகிக்க தகுந்த நபரை சென்னை ஐகோர்ட்டு நியமிக்கவேண்டும் என்றும் அந்த உயிலில் எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

இதன்படி, முதலில் என்.சி.ராகவாச்சாரியும், அவரது மறைவுக்கு பின்னர் ராஜேந்திரனும் இந்த அறக்கட்டளை, சொத்துக்களை நிர்வகித்தனர். இந்த நிலையில், ராஜேந்திரன் கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அறக்கட்டளையை நிர்வகிக்க நிர்வாகியை நியமனம் செய்வது தொடர்பாக ஐகோர்ட்டில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் 6 பேரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில், லதா ராஜேந்திரன் தன்னை நிர்வாகியாக நியமிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு வளர்ப்பு மகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை எல்லாம் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்தவரும், கொடைவள்ளல் என்று அழைக்கப்பட்டவருமான எம்.ஜி.ஆர். தன்னுடைய சொத்துக்களை தன் மனைவி வி.என்.ஜானகி மறைவுக்கு பின்னர் யார் நிர்வகிக்க வேண்டும்? என்பதை 1987-ம் ஆண்டே உயில் எழுதி வைத்துள்ளார். இதன்படி, மூத்த வக்கீல் என்.சி.ராகவாச்சாரியும், அவருக்கு பின்னர் ராஜேந்திரனும் நிர்வகித்தனர்.

எம்.ஜி.ஆரின் உயில் படி, ராமாவரம் வீடு வளர்ப்பு மகள்களுக்கு, மீதமுள்ள சொத்துக்கள் காது மற்றும் பேச முடியாத மக்களுக்கு என்று எழுதி வைத்தார். ராமாவரம் தோட்டத்தில் ‘எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம்’ என்று தொடங்கப்பட்டு, அங்கு தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, உடை, உறைவிடம் அனைத்தையும் வழங்க வேண்டும். இதற்காக சாலிகிராமத்தில் உள்ள சத்தியா கார்டன் மூலம் வரும் வருமானத்தை செலவு செய்யவேண்டும்.

அதேபோல, ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அனைத்து சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை எப்படி செலவு செய்யவேண்டும்? என்றும் அவர் உயிலில் தெளிவாக எழுதியுள்ளார்.

தற்போது, இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க லதா ராஜேந்திரன் உரிமை கோருகிறார். இவர் தன் கணவர் ராஜேந்திரன் இந்த சொத்துக்ககளை நிர்வகிக்கும்போது, அவருக்கு உதவியாக இருந்த அனுபவம் உள்ளது என்று தெரிவித்தார். ஆனால், இதற்கு மற்றொரு வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கோர்ட்டில் ஆஜராகி, ‘லதா ராஜேந்திரன் எம்.ஜி.ஆரின் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதை கேட்டால், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். கல்லூரிகளை கட்டுவதற்கு வெளிநபர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்துள்ளார்’ என்று ஏராளமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

எனவே, இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் பரிசீலிக்க விரும்பவில்லை. அதேநேரம், ஒரு நிர்வாகியை நியமிக்க முடிவு செய்கிறேன். அதன்படி, எம்.ஜி.ஆரின் சொத்துக்களை மற்றும் அறக்கட்டளை என்று நிர்வகிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமனை நியமிக்கின்றேன். இதற்காக அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் அறக்கட்டளையில் இருந்து வழங்கப்பட வேண்டும்.

அறக்கட்டளை, சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் உட்பட அனைத்து நிர்வாகத்தையும் நீதிபதி அரிபரந்தாமன் மேற்கொள்ளவேண்டும். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள், அறக்கட்டளை, சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனைகளை நீதிபதிக்கு வழங்கலாம். ஆனால், இறுதி முடிவினை நீதிபதி அரிபரந்தாமன் தான் எடுக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Similar News