செய்திகள்

செல்போனில் பெண் குளிப்பதை படம் பிடித்த ஆசிரியருக்கு 3 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-11-05 15:01 GMT   |   Update On 2016-11-05 15:01 GMT
தஞ்சையில் செல்போனில் பெண் குளிப்பதை படம் பிடித்த ஆசிரியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தஞ்சாவூர்:

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா கப்பூர் கிராமம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் பாலமுருகன்(வயது34). மாற்றுத்திறனாளியான இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

மேலும் பெட்டிக்கடையும் நடத்தி வந்தார். இவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தினேஷ்குமார். இவருடைய மனைவி கலைமகள்(25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி குளிப்பதற்காக குளியல்அறைக்கு சென்றார். கீற்றுகளாலும், மூங்கில் கம்பினாலும் இந்த குளியல்அறை கட்டப்பட்டு இருந்தது. கலைமகள் குளித்து முடித்தபோது மூங்கில் கம்புகளுக்கு இடையே செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த செல்போனை எடுத்து அவர் பார்த்தபோது, குளியல்அறைக்குள் கலைமகள் வந்தது முதல் அவர் குளித்து முடிக்கும் வரை வீடியோவில் பதிவாகி இருந்தது. அந்த செல்போன் பாலமுருகனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இது குறித்து பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் கலைமகள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கலைமகள் குளிப்பதை வீடியோவில் பதிவு செய்வதற்காக பாலமுருகன் தான் குளியல் அறையில் செல்போனை வைத்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து பாலமுருகனை போலீசார் கைது செய்து தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில்(குடிஉரிமை பாதுகாப்பு) வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரணை செய்து பாலமுருகனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

Similar News