செய்திகள்

கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கு: திருமணநாளில் கைதான புதுமாப்பிள்ளை கோர்ட்டில் ஆஜர்

Published On 2016-11-05 06:00 GMT   |   Update On 2016-11-05 06:00 GMT
கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் திருமண நாளில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:

தக்கலை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அந்த மாணவியை குழித்துறையை சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் (வயது 27) என்பவர் காதலித்து வந்தார்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை நாகர்கோவிலில் உள்ள லாட்ஜிக்கு அழைத்துச் சென்று காதலன் சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் தனது நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்கினார்.

இதுகுறித்து வடசேரி போலீசில் கல்லூரி மாணவி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ், தினேஷ், ஞானபிரவின், கோபால் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஞானபிரவின் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் ஞானபிரவின் மதுரை கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். தனக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதுவரை தன்னை கைது செய்யக்கூடாது என்று மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி திருமணம் முடிந்ததும் அன்று மாலையில் 5 மணிக்கு வடசேரி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று ஞானபிரவினுக்கு நாகர்கோவில் அருகே திருமணம் நடந்தது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி வள்ளியூரில் நடைபெற்றது. கோர்ட்டு விதித்த கெடு மாலை 5 மணியுடன் முடிவடைந்த பிறகும் ஞானபிரவின் போலீஸ்நிலையத்தில் ஆஜர் ஆகாமல் இருந்தார். இதையடுத்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வள்ளியூருக்கு சென்று ஞானபிரவினை கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். திருமண நாளில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட ஞானபிரவினிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும். நான் தற்போது நாகர்கோவிலில் தங்கி இங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன்.

ஒருநாள் எனது நண்பர் ஒருவர் நகைகளை அடகு வைத்து தருமாறு என்னிடம் கொடுத்தார். நான் அந்த நகைகளை வடசேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகுவைத்து கொடுத்தேன். என்மீது புகார் கூறிய பெண்ணை எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

இதையடுத்து போலீசார் ஞானபிரவினை நாகர்கோவில் ஜே.எம்.- 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

Similar News