செய்திகள்

கயத்தாறு அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது

Published On 2016-11-04 12:23 GMT   |   Update On 2016-11-04 12:24 GMT
கயத்தாறு அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கம்மாபட்டியை சேர்ந்தவர் அருண்குமார். எலக்ட்ரீசியனான இவரது மனைவி நிஷாந்தி (வயது 23). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த 3 வாலிபர்கள் நிஷாந்தியை கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களை தடுத்த நிஷாந்தியின் மாமனாரை 3 வாலிபர்களும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் சிவகிரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நெல்லை டவுணை சேர்ந்த கார்த்திக்(23), வேலாயுதம்(25), சீனிமாரியப்பன்(23) என்பதும் இவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சிவகிரியில் கைதான 3 கொள்ளையர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி கோவில்பட்டி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். பின்னர் காவலில் எடுக்கப்பட்ட 3 கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் பரபரப்பு தகவல் வெளியானது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கயத்தாறு அருகே உள்ள கம்மாபட்டியை சேர்ந்த நிஷாந்தியிடம் 3 பவுன் நகையை பறித்தது இவர்கள் 3 பேர்தான் என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்ததும் மீண்டும் 3 கொள்ளையர்களையும் போலீசார் பாளை சிறையில் அடைத்தனர்.

Similar News