செய்திகள்

அரக்கோணம்- செய்யாறில் பிளஸ்-1 மாணவி,சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2016-11-02 10:46 GMT   |   Update On 2016-11-02 10:46 GMT
அரக்கோணம்- செய்யாறில் பிளஸ்-1 மாணவி,சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்:

அரக்கோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் திருமணம் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதுபற்றி வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சந்தியாவுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி பிளஸ்-1 படித்து வருவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் மாணவி மற்றும் மணமகனின் பெற்றோரை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து திருமண வயதுக்கு முன்பு திருமணம் நடத்தினால் சட்டப்படி குற்றமாகும். திருமணம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

செய்யாறு தாலுகா வடதின்னலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் கோவிந்தராஜ் என்பவரின் மகனுக்கும் இன்று (புதன்கிழமை) வடதின்னலூர் கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோவிலில் திருமணம் நடத்தி வைக்க இருதரப்பு பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்தனர். அதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் 16 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்யாறு தாசில்தார் ரெகானாபேகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக நேற்று வடதின்னலூருக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது 16 வயதுடைய சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கண்காணிக்க பெரணமல்லூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News