செய்திகள்

தமிழகம் முழுவதும் சோதனை: அதிக கட்டணம் வசூலித்த 7 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

Published On 2016-10-28 07:28 GMT   |   Update On 2016-10-28 07:29 GMT
தமிழகம் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் அதிக கட்டணம் வசூலித்த 7 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை:

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து போக்குவரத்து துறை செயலாளர் சத்தியா பிரதாப் சாகு, இணை ஆணையர் வீரபாண்டியன் ஆகியோர் உத்தரவின் பேரில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் நடத்திய சோதனையில் 7 ஆம்னி பஸ்கள் பிடிக்கப்பட்டன.

சென்னையில் ஒரு ஆம்னி பஸ்சும், கோவையில் -2-ம், விழுப்புத்தில் -2, சேலத்தில் 2 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு வசூலிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அதிக கட்டணம் வசூலித்ததோடு வரி செலுத்தாமலும், பெர்மிட் இல்லாமலும் இந்த பஸ்கள் இயக்கப்பட்டது தெரிய வந்தது.

இது தவிர 155 ஆம்னி பஸ்களில் முறையான ஆவணங்கள், வதிமுறைகள் பின்பற்றாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டன. அவற்றிடம் இருந்து ரூ. 2 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டன.

இது குறித்து பறக்கும் படை வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி கூறியதாவது:-

அதிக கட்டணம் வசூலிக்க கூடிய ஆம்னி பஸ்களை பிடிக்க 12 குழுக்கள் சென்னையில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், செங்குன்றம், கிழக்கு கடற்கரைசாலை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

இதில் சென்னையில் ஒரு பஸ் உள்பட மொத்தம் 7 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 155 பஸ்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும் வெளியூர்களில் இருந்து திங்கட்கிழமை சென்னை திரும்பும் பஸ்களிலும் சோதனை நடத்தப்படும் என்றார்.

Similar News