செய்திகள்

ரெயில் பயணிகளிடம் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது

Published On 2016-10-26 03:57 GMT   |   Update On 2016-10-26 03:57 GMT
ரெயில் பயணிகளிடம் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை அடித்த வடமாநில ஆசாமிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மயக்க மருந்து கொடுத்து மர்ம ஆசாமிகள் பயணிகளின் உடமைகள் மற்றும் பொருட்களை திருடுவதாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பயணிகள் உடைமைகளை திருடும் ஆசாமிகளை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவில்லாத பெட்டிகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகையில் 2 பேர் ரெயில் பெட்டிகளில் சுற்றித் திரிந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் மயக்க மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குளிர்பானங்கள், மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டுகளும் இருந்தன.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடியான விசாரணையில் 2 பேரும் ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சத்ராஜித் (வயது 35) மற்றும் சாதுசிங் (34) என்பது தெரியவந்தது. சத்ராஜித் மற்றும் சாதுசிங்கிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ரெயில்வே போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும் ரெயில்களில் பல வருடங்களாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். நாங்கள் நடத்திய சோதனையில் 2 பேரும் சிக்கினர் என்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்-டாப்கள், செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News