செய்திகள்

விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம்: அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் மீது வழக்கு

Published On 2016-10-24 12:15 GMT   |   Update On 2016-10-24 12:15 GMT
தஞ்சை சட்டசபை தொகுதியில் சுவர் விளம்பரம் செய்த அ.தி.மு.க. மற்றும் ஐ.ஜே.கே. கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை சட்டசபை தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

சட்டசபை தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தஞ்சை சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் அல்லது பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? எனவும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் தஞ்சை நகரில் 13 இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை சட்டசபை தொகுதியில் சுவர் விளம்பரங்கள் செய்துள்ள கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி தஞ்சையை அடுத்த வல்லம் மாரியம்மன் கோவில் அருகே சுவர் விளம்பரம் செய்துள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த வல்லம் பேரூராட்சி தலைவர் சிங்.ஜெகதீசன் மீதும், ஆலக்குடி பகுதியில் சுவர் விளம்பரம் செய்துள்ள ஐ.ஜே.கே. கட்சியின் மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் மீதும் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போல், தஞ்சை மாதாக்கோட்டை பகுதியில் உள்ள புறவழிச்சாலை பகுதியில் சுவர் விளம்பரம் செய்துள்ள அ.தி.மு.க.வினர் மீதும், மாதாக்கோட்டை பகுதியில் சுவர் விளம்பரம் செய்துள்ள ஐ.ஜே.கே. கட்சியின் மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் மீதும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை- வல்லம் பகுதியில் மட்டும் அ.தி.மு.க. மீது 2 வழக்குகளும், ஐ.ஜே.கே மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News