செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2016-10-06 10:34 GMT   |   Update On 2016-10-06 10:35 GMT
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.39 ஆயிரத்தை பறித்து சென்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை பொன்மேனியில் தனியார் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காளிராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் வசூல் செய்யப்பட்ட பணத்தை வங்கிக்கு கொண்டு செல்ல முயன்ற போது, 3 பேர் அதனை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. ரூ.39 ஆயிரம் கொள்ளை போனதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின்பேரில் துணை கமி‌ஷனர் ஜெயந்தி மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ் பெக்டர் ரமணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் தியாக ராஜன், அப்துல் லத்தீப், ஏட்டுகள் பாலமுருகன், கமலஹாசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை பை-பாஸ் ரோடு நேரு நகர் சந்திப்பில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வேகமாக வந்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காளிராஜனிடம் ரூ.39 ஆயிரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதன்பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களது பெயர் மனோஜ்குமார் (வயது27), அசாருதீன் (20), சுனில் பிரபாகர் (20) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரைக் சேர்ந்தவர்கள்.

இதில் சுனில் பிரபாகர் கல்லூரி மாணவர் ஆவார். பணம் பறிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது மனோஜ்குமார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவன் ஏற்கனவே பொன்மேனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளை நடந்த ஒரே நாளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவ் பாராட்டினார்.

Similar News