செய்திகள்

கடையநல்லூரில் ஐ.எஸ். ஆதரவாளர் கைது

Published On 2016-10-03 14:28 GMT   |   Update On 2016-10-03 14:28 GMT
கடையநல்லூரில் ஐ.எஸ். ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடையநல்லூர்:

கேரளாவில் கைதான ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு கடையநல்லூருக்கு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு கடையநல்லூர் பேட்டை பகுதியில் காஜாமுகைதீன் என்பவரது வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கிருந்த காஜாமுகைதீன் மகன் சுபஹானி (வயது 35)என்பவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கைதான சுபஹானியின் தந்தை காஜாமுகைதீன் கேரளமாநிலம் தொடு புழாவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் கடந்த சில வருடங்களாக தந்தைக்கு உதவியாக இருந்து வந்த சுபஹானி சில மாதங்களாக கடையநல்லூருக்கு திரும்பி வந்து விட்டார். இங்கு ஒரு தங்க நகை வியாபாரியிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுபஹானிக்கு திருமணமாகி ஆயிஷா என்ற மனைவி உள்ளார். கேரளாவில் தந்தைக்கு உதவியாக இருந்தபோது சுபஹானிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என தேசிய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேசிய புலனாய்வு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News