செய்திகள்

அதிகரிக்கும் தொடர் வழிப்பறி: கொள்ளையர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் பழனி

Published On 2016-10-01 17:20 GMT   |   Update On 2016-10-01 17:20 GMT
பழனி நகரம் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

பழனி:

முருகப் பெருமானின் 3-ம் படை வீடாக பழனி திருத்தலம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே பழனி நகர் வீதி எங்கும் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.

ஆனால் கடந்த சில நாட்களாக கோவில் நகரம் பழனியானது கொள்ளையர்கள் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால் இது வரை எந்தவித துப்பும் துலங்கப்படவில்லை.

நேற்று மாலை பழனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி அமிர்தம் (வயது 77) பழனி வீதியில் தனது பேரன் பேத்திகளுக்கு திண்பண்டம் வாங்கச் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அமிர்தத்தை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமைந்த அமிர்தம் பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது போன்று அதிகாலையிலும் மாலை வேளையிலும் பள்ளி கல்லூரி வளாகங்களில் நடை பயிற்சிக்காக சென்று வரும் பெண்களிடம் கொள்ளையர்கள் குறி வைத்து நகையை பறித்து வருகின்றனர். மேலும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கை வரிசை காட்டி வருகிறது.

ஆனால் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் பற்றிய செய்திகளை பிரசுரித்தால் நிருபர்களை போலீசார் மிரட்டி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க திராணி இல்லாத போலீசார் பழனி நகர் பகுதியில் உலா வருகின்றனர். காக்கிச் சட்டையை கழற்றி விட்டு வீட்டுக்கு போகவேண்டியதுதான என பொதுமக்கள் போலீசாரை பார்த்து கேவலமாக பேசுகிறார்கள்.

பத்திரிகைகளுக்கு செய்திகள் வெளியானால் தங்களது உண்மை சுயரூபம் தெரிந்து விடும் என்று கருதி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிருபர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையும் மீறி செய்திகளை பிரசுரித்தால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல் பழனி நிருபர்களை போலீசார் மிரட்டி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க துப்பு இல்லாத போலீசார் நிருபர்களை மிரட்டாமல் தங்களது பணிகளை ஒழுங்காக செய்தால்தான் இது போன்ற திருட்டு சம்பவங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News