செய்திகள்

பெரம்பலூரில் பா. ஜனதாவினர் சாலை மறியல்– ஆர்ப்பாட்டம்: 79 பேர் கைது

Published On 2016-09-29 17:52 GMT   |   Update On 2016-09-29 17:52 GMT
பெரம்பலூரில் பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 79 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இந்து முன்னணி மாவட்ட செய்திதொடர்பாளர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துபவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், இந்து இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், பா. ஜனதா மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன் தலைமையில் பா.ஜனதாவினர் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் அடைக்கலராஜ், இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ, ஈஸ்வர் மணி, பெரம்பலூர் நகரதலைவர் கமல்முத்துகுமார், நகர பொதுச்செயலாளர் சுரேஷகுமார் மற்றும் 4 பெண்கள் உள்பட 44 பேரை பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட பா.ஜனதா தலைவர் நடராஜன் தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 35 பேரை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.

Similar News